கேரள விமான விபத்திற்கு டேபிள்டாப் ஓடுதளமா காரணம்?
துபாயிலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 7) வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் இரண்டு விமானி உட்பட 18 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக வெளியான தகவல் அறிக்கையில் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கு டேபிள்டாப் ஓடுதளமே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் மூன்று விமான நிலையங்கள் டேபிள்டாப் ஓடுதளத்தை கொண்டுள்ளது. அவை கோழிக்கோடு, மங்களூர் மற்றும் மிசோரம் விமானநிலையங்கள் ஆகும்.
டேபிள்டாப் ஓடுதளம் என்பது விமான ஓடுதளம் மலையின் உச்சியில் அல்லது இரண்டு முனைகளும் செங்குத்துப் பாதையை ஒட்டியிருக்கும். இது ஆழமான பள்ளத்தாக்கை கொண்டிருக்கும். இந்த வகை ஓடுபாதையில் விமானி மிகத் துல்லியமாக தரையிறக்க வேண்டும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துள்ளானது. இதில் விமானம் வெடித்து 158 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு டேபிள்டாப் ஓடுதளமே முக்கிய காரணமாக செல்லப்பட்டது.