ஓமானில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு – PACA அறிவிப்பு
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை ஓமானில் உள்ள பகுதிகளைத் தாக்கும் என சிவில் ஏவியேஷனுக்கான பொது ஆணையம் (PACA) தனது சமீபத்திய செய்திக்குறிப்பில் அறிவித்ததுள்ளது. மேலும் சனிக்கிழமை மழையானது உச்சத்தை எட்டும் என்று PACA தெரிவித்துள்ளது.
குறிப்பாக மஸ்கத், தெற்கு அல் ஷர்கியா, வடக்கு அல் ஷர்கியா, அல் தக்லியா, தெற்கு அல் படினா, வடக்கு அல் படினா, அல் தஹிரா மற்றும் அல் புராய்மி ஆகிய மாநிலங்களில் 24 மணி நேரத்தில் 40 முதல் 100 மி.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் வலுவான காற்று வீசக்கூடும் என்றும் இதனால் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் நீர் நிலைகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் நிலைமைகள் (4-5 மீட்டர்) கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிக அலைகள் காரணமாக கடலோரப் பகுதிகள் கடல் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை கடப்பதை தவிர்க்கவும், கடலுக்குள் செல்வதைத் தவிர்க்கவும் PACA பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.