பாகிஸ்தானில் 860 விமானிகளில் 262 பேர் போலி விமானிகள்!

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் வியாழக்கிழமையன்று தவரான முறையில் மற்றவர்களை கொண்டு தேர்வெழுதி விமான உரிமம் பெற்ற குற்றச்சாட்டில் 150 விமானிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 97 பேர் கொல்லப்பட்டது குறித்த இடைக்கால விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்த விசாரனை அறிக்கையின் மூலம் போலி உரிமங்களை வைத்திருந்த 150 விமானிகளை அகற்றுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது என்று PIA இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது
“தகுதியற்ற விமானிகளை கொண்டு மீண்டும் ஒருபோதும் விமானத்தை பறக்க விடமாட்டோம் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தானின் விமான போக்குவரத்துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் பாராளுமன்றத்தில் கூறுகையில், விபத்து தொடர்பான விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை முன்வைக்கும் போது ஏராளமான வணிக விமானிகள் சந்தேகத்திற்குரிய விமான உரிமங்களை வைத்திருக்கிறார்கள் என்றார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் 860 விமானிகளில் 262 பேர்களிடம் போலி உரிமங்கள் இருந்து என்றார்.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானிகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து விவாதித்து வந்தனர் என்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எச்சரிக்கைகளை பலமுறை புறக்கணித்ததாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விமானிகள் விமானம் பறக்கும் போது கொரோனாவைப் பற்றி விவாதித்து வந்தனர். அவர்கள் விமானத்தில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் கொரோனா வைரஸ் மற்றும் அவர்களது குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றி பேசிவந்தனர்” என்று அமைச்சர் கூறினார். விமானிகள் “அதிக தன்னம்பிக்கை கொண்டிருந்தனர்” என்று தெரிவித்தார்.