மக்காவில் உள்ள மசூதிகளை சவூதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் திறக்க உள்ளது

சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்கா நகரில் உள்ள 1560 மசூதிகளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மீண்டும் திறக்க உள்ளது.

மக்காவில் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மசூதிகளையும் மீண்டும் திறக்கத் தயார் செய்துள்ளதாகவும், பிரார்த்தனை விரிப்புகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது மற்றும் வழிபாட்டாளர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதி செய்வது போன்ற முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கியுள்ளதாகவும் தெறிவித்தது.

தொழுகை செய்யும் போது தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வழிபாட்டாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் தன்னார்வலர்கள் மசூதிகளில் இடைவெளி ஸ்டிக்கர்களை வைத்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வழிபாட்டாளர்களுக்கு மசூதிகளுக்குள் நுழையும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தன்னார்வலர்கள் தெரிவிப்பார்கள்.

தகவல் சுவரொட்டிகள் மசூதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் கொரோன நோய் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் தினசரி 4000 கடக்கிறது. ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் 4,000 தை தாண்டியுள்ளது, முந்தைய 24 மணி நேரத்தில் 4,301 புதிய வழக்குகள் மற்றும் 45 இறப்புகள் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுவரை சவூதி அரேபியாவில் 1,184 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 150,292 ஆக அதிகரித்துள்ளது.

நோய் உறுதி செய்ய்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கான 95,764 நபர்கள் குணமடைந்து உள்ளனர். 53,344 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 1,941 நபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா 16 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.